ஒகேனக்கல், அக். 29 -
பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, நாட்றாம்பாளையம், தொட்டமஞ்சு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மின்வெட்டை கண்டித்து, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் பென்னாகரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆ. ஜீவானந்தம் தலைமையேற்றார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் அ.குமார், மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சக்திவேல், கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. பிரகாஷ், அஞ்செட்டி வட்ட செயலாளர் பி.தேவராஜன், மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் வி. ரவி, கே. அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“புகழ்பெற்ற சுற்றுலாதளம் ஒகேனக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு நிலவி வருவது, பொதுமக்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது. இதை அரசு உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
-
ஒகேனக்கல், ஊட்டமலை, நாட்றாம்பாளையம், தொட்டமஞ்சு பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
-
பென்னாகரம் துணை மின் நிலையத்தில் தற்போது உள்ள 62 எம்வி மின்னழுத்த மாற்றியை 240 எம்வி அளவுக்கு மேம்படுத்த வேண்டும்.
-
நாட்றாம்பாளையம் மற்றும் தொட்டமஞ்சு பகுதிகளில் உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர் அமைத்து, அஞ்செட்டி துணை மின் நிலையத்துடன் இணைக்க வேண்டும்.
-
ஒகேனக்கல் வனப்பகுதியில் பூமிக்குள் உள்ள மின் கேபிள்களில் பழுது ஏற்பட்டால் சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்க வேண்டும்.
-
மின் பற்றாக்குறையை நீக்க ஒகேனக்கல் நீர்மின் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு “மின்வெட்டை நிறுத்து – மின்சாரம் வழங்கு!” என கோஷமிட்டனர். நிகழ்ச்சி முடிவில் ஒகேனக்கல் கிளை செயலாளர் என். மாரிமுத்து நன்றி கூறினார்.

.jpg)